Tuesday, April 14, 2015

என் முதல் கவிதை

என் முதல் கவிதை..........
(பள்ளி ஆண்டு மலருக்காக 1985ல் எழுதியது)

கம்ப்யூட்டர் என்னும் சாதனமாம்
கணக்கை எளிதே தீர்த்திடுமாம்
சிக்கல்கள் பலவே இருந்தாலும்
சில நொடிகளிலே காட்டிடுமாம்
விடை தெரியாத வினாக்களுக்கும்
விரைவே விடையைத் தந்திடுமாம்
இந்நூற்றாண்டின் கலைச்செல்வம்
இனிதே இதனை வளர்ப்போமே!

Thursday, April 9, 2015

பொய் முகங்கள்

பொய் முகங்கள்.............................................

கவலையின்றி களிப்புடனே
துள்ளிக் குதித்து விளையாடிய
பள்ளி பருவ நாட்களிலே
மனதில் பட்டவற்றை
“பட்” டென சொல்லி விட்டேன்
தப்பாக நினைக்கவில்லை
பத்தாம் வகுப்பு நுழைந்தவுடன்
“பாடம் படிக்கவில்லை” என்று கூறும்
நான் பார்த்த நண்பர்களின்
முதல் “பொய் முகங்கள்”
முதன் முதலாய் கண்டேன் நான்
உற்ற நண்பர்களின்...........
பொய் முகங்களின்
உண்மையான தோற்றத்தை.................
உண்மையை மறைப்பதற்கு
உலகம் கொடுத்த பெயர்
“சாமர்த்தியம்”

சாமானியனின் உண்மை முகம்
சாமர்த்தியமாய் செயல்பட்டால்
கிடைக்கின்ற பரிணாமம்
“பொய் முகங்கள்”

உற்றாரும் மற்றாரும்
நண்பர்களும் நண்பிகளும்
உள்ள இந்த சமுதாயத்தின்
பொய்யான முகத்தைக் கண்டு
மனம் பொங்கியது........வெம்பியது.......

வறுமையிலே வெறுமையிலே
கடந்து வந்த இளமை நாட்கள்
பொய் முகத்தின் முகவரியை
இவ்வையகத்தில் காட்டியது.


’குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை”
என் தந்தை எனக்களித்த உபதேசம்
பொய் முகத்தை சகித்துக் கொள்ள
என் மனதைத் தயார் செய்த மூல மந்திரம்.

கல்லூரி வாழ்க்கையிலே
கள்ளமில்லா மனம் கொண்ட
நண்பர்கள் கிடைத்தமைக்கு
 நான் சொன்னேன் நன்றி கோடி
ஆத்மார்த்தமான அன்பின்
முகவரியே “உண்மை முகம்”

வேலையில்லா பட்டதாரி
வேலை தேடி அலைந்த்திட்டேன்
தேவையான தகுதிகளில்
அறிந்து கொண்டேன்
“பொய் முகமும்” ஒன்று என்று..........

முருகனுடைய திருவருளால்
முயற்சிகளின் பலனாக
முன்ணனி நிறுவனத்தில்
முதல் பணியில் சேர்ந்திட்டேன்.......

பதவிகளும் பல பெற்று
வாழ்க்கைத் தரம் முன்னேற
பல வண்ணக் கனவோடு
பணி நாளைத் துவங்கிட்டேன்.

புத்தம் புதிய சூழ் நிலையில்
நித்தம் ஒரு அனுபவம் தான்......
பொய் முகத்தின் குவியல்களில்
உண்மை முகம் புதைந்த்தனவே!

நெஞ்சு நிமிர்த்தி கருத்துச் சொன்னால்
 நஞ்சுமிழ்ந்த பொய் முகங்கள்
வஞ்சமில்லா எனது மனம் - நய
வஞ்சகத்தை புரிந்து கொள்ளாதது ஏனோ?

மெய் என்று பொய் முகத்தை
நம்பி நம்பி மனம் நொந்தேன்.....
உண்மைதனை உரக்க உரைத்ததினால்
ஊதியத்தில் உயர்வு இல்லை
ஊமையாகிப் போனேன் நான்............
பொருல் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
வள்ளுவன் வாக்கு சத்தியமன்றோ?
பொருளில்லா உலகத்தில்
உண்மை முகத்திற்கு மதிப்பு எங்கே? உயர்வு எங்கே?

வாழ்க்கை கல்வியிலே
உண்மை முகம் புதைத்துக் கொண்டு
பொய் முகத்தை மாட்டிக் கொள்ள
கற்கவில்லை.......கற்கவில்லை.......

அதனால் தான் இச்சமூகம்
“சிரிக்கின்ற வில்லன்” என்றும்
“புரட்சிக்கார குசும்பன்” என்றும்
”திமிர் பிடித்த வம்பன்” என்றும்
பட்டங்களைச் சூட்டியது.

 நொடிக்கொருதரம் பொய் முகத்தை
அடிக்கல்லாய் அணிந்திட்ட அனைவருமே
படிப்படியாய் முன்னேறும் காட்சியினால்
மடிந்த்ததுவோ? உண்மை முகம்
வடித்துக் கொண்டே கண்ணிரை...............


Tuesday, April 7, 2015

 நினைத்தேன் எழுதுகிறேன்................

கதை சொல்வது......கதை கேட்பது இந்த இரண்டுமே இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிதாகிவிட்டது.  என்னுடைய சிறு வயதில் பாஸ்கர் அண்ணன் கதை சொல்வது தான் நினைவிற்கு வருகிறது.

ராணிமுத்து காமிக்ஸ் , ஒற்றைக்கண் மாயாவி,  அம்புலிமாமா, கோகுலம், இந்திரஜால் காமிக்ஸ், போன்ற புத்தகத்தில் வரும் கதைகள் மிகப் பிரபலம். இதில் ராஜா ராணி கதை, துப்பறியும் கதை, குடியானவன் கதை போன்ற கதைகள் அடங்கும்.

ஆனால் பாஸ்கர் அண்ணா சொல்லும் கதை மாதக் கணக்கில் செல்லும். அவர் கதை சொல்லும் பாங்கு, இனம் புரியாத சந்தோஷத்தையும் சுவாரஸ்யத்தையும் கொடுக்கும்.

 நாங்கள் சிறுவர் சிறுமியர் என்று பல வயதினரும் கதை கேட்கும் குழுவில் அடக்கம்.

சிறு வயது நினைவுகளை அசை போடுவதில் என்ன ஒரு புத்துணர்ச்சி..........